1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
5. மகத்தான ஒரு நாளுக்காக,
6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
7. ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
8. `ஸிஜ்ஜீன்` என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
9. அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
10. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
11. அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
12. வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
13. நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
14. அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
15. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
16. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
17. "எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
18. நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
19. "இல்லிய்யுன்` என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
20. (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
21. (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
22. நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) `நயீம்` என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
23. ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
24. அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
25. (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
26. அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
27. இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
28. அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
29. நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
30. அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
31. இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
32. மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
33. (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
34. ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
35. ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
36. காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)