1. அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
14. உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
21. பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்` ஆக்குகிறான்.
22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
29. ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
30. அடர்ந்த தோட்டங்களையும்,
31. பழங்களையும், தீவனங்களையும்-
32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
33. ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.