1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.
2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள்.
3. அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
4. அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
5. நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
6. ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்;
7. (தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
8. அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், "இது மிகவும் கஷ்டமான நாள்" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
9. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) `பைத்தியக்காரர்` என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.
10. அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
11. ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
12. மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
13. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
14. எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
15. நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
16. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
18. `ஆது` (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
20. நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
21. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
22. நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
23. ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
24. "நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
25. "நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).
26. "ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
27. அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
28. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
29. ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
30. என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
32. நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
33. லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
35. நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
36. திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.
37. அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்).
38. எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
39. "ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறினோம்).
40. நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
41. ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
42. ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
43. (சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
44. அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா?
45. அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
46. அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.
47. நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்).
49. நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
50. நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
51. (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
53. சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
54. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
55. உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.